சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கட்டாய கொரோனா பரிசோதன போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, சில நாடுகள் சீன பயணிகளை மட்டும் குறிவைத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் எச்சரித்தது.
இந்த நிலையில் சீன பயணிகளுக்கு தென்கொரியா கட்டுப்பாடுகளை விதித்ததற்கு பதிலடியாக தென்கொரிய மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரியாவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “தென்கொரியா சீன பயணிகள் மீதான பாரபட்சமான நடவடிக்கைகளை நீக்கும் வரை அந்த நாட்டில் இருந்து சீனாவுக்கு சுற்றுலா மற்றும் வணிகத்துக்காக வருபவர்களுக்குரிய விசா நிறுத்திவைக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.