அமெரிக்காவில் மற்ற மாகாணங்களில் பனிப்புயலின் தாக்கம் குறைந்தபோதிலும், கலிபோர்னியா மாகாணத்தில் தொடர்ந்து பனிப்புயல்கள் தாக்கி வருகின்றன. மேலும் அங்கு வரலாறு காணாத அளவுக்கு கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகி உள்ளன.
அமெரிக்காவில் கடந்த மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெடிகுண்டு புயல் என்று அழைக்கப்படும் சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கியது.
இதில் நியூயார்க், கலிபோர்னியா உள்பட 10-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கபட்டன. பனிப்புயல் தொடர்பான சம்பவங்களில் 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கலிபோர்னியா மாகாணத்தை மீண்டும் பயங்கர பனிப்புயல் தாக்கியது. தொடர்ந்து அங்கு கனமழையும் கொட்டித்தீர்த்தது. இதனால் சான்பிரான்சிஸ்கோ உள்பட பல நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பனிப்புயல் மற்றும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. மேலும் பனிப்புயல் தொடர்பான சம்பவங்களில் 16 பேர் பலியானதாகவும், டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.