சபரிமலையில் வரும் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார்.
இந்நிலையில் அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டி இன்று வலியகோய்க்கல் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. பந்தள மன்னருடைய பிரநிதியான ராஜராஜவர்மா தலைமையில் சிவன் குட்டி குழுவினர் பெட்டியை எடுத்துச் செல்கின்றனர்.
கானக பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க ஆபரண பெட்டி கொண்டு செல்லப்படுகிறது. பம்பையில் உள்ள கணபதி கோவிலுக்கு வரும் 14-ந்தேதி இந்த ஆபரண பெட்டி வந்தடையும். அங்கு ஆபரண பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து தலைச்சுமையாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
சரங்கொத்தி பகுதியில் தேவசம்போர்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்போடு தங்க ஆபரண பெட்டியை சபரிமலைக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் ஆபரண பெட்டி 18-ம் படியேறி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அதே சமயம் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு அய்யப்ப சுவாமி ஜோதியாக காட்சியளிப்பார்.