சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டஸன் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் விராட் கோலி 2 இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதே ஆட்டத்தில் 83 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா ஒரு இடம் உயர்ந்து 8-வது இடத்தை பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர்களில் டாப்-10 இடத்தில் மாற்றமில்லை. நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 இடங்கள் அதிகரித்து 18-வது இடத்துக்கு வந்துள்ளார்.
20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 908 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறார். 20 ஓவர் பேட்ஸ்மேன் வரிசையில் டாப்-10 இடத்திற்குள் உள்ள ஒரே இந்தியர் அவர் தான்.
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 195 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 4 இடங்கள் ஏற்றம் கண்டு 8-வது இடத்தை பிடித்துள்ளார்.