பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான ரீயூனியன் தீவில் தஞ்சமடைய சட்டவிரோதமாக கடல் வழியாக முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள், விமானம் மூலம் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி படகில் ஏறி புறப்பட்டு ரியூனியன் தீவில் தஞ்சமடைய முயற்சித்த போது ஆழ்கடல் மீன்பிடி படகின் பணியாளர்களுடன் 43 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் என 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி இவர்கள் ரியூனியன் தீவுக்குள் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், யாழ்ப்பாண்ம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த 13 முதல் 53 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ரியூனியன் தீவில் இருந்து நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.