இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெங்குலு மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 18 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. உள்ளூர் நேரடிப்படி அதிகாலை 5.41 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு நீடித்தது. அப்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது படுகாயம் போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததாகவோ, பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல்கள் இல்லை.
முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதும், அதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.