பஞ்சாபில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, ஹோஷியார்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவருடைய சித்தப்பா மகனும், பா.ஜனதா எம்.பி.யுமான வருண்காந்தியுடன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ராகுல்காந்தி கூறியதாவது:- வருண்காந்தியின் சித்தாந்தமும், எனது சித்தாந்தமும் வேறு வேறு. இரண்டும் பொருந்தாது.
என்னால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு செல்ல முடியாது. என் கழுத்தை அறுத்தாலும் போக மாட்டேன். ஒரு சமயத்தில், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை வருண்காந்தி ஏற்றுக்கொண்டார்.
அது நல்ல காரியங்கள் செய்வதாக கூறினார். இப்போதும் அப்படித்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். நான் அவரை பாசத்துடன் சந்திக்கலாம். கட்டிப்பிடிக்கலாம். ஆனால் அவரது சித்தாந்தத்தை ஏற்க முடியாது. அவர் எனது பாதயாத்திரையில் பங்கேற்றால் அவருக்கு பிரச்சினை ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.