எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஊழல்வாதிகளான ராஜபக்சவினரின் அரசியல் பலத்தை 10 வீதமாக குறைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும் என 43 வது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
43வது படையணி கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்சவினரின் பலத்தை 10 வீதமாக குறைக்க வேண்டும்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ராஜபக்சவினரின் அரசியல் பலத்தை 10 வீதமாக குறைத்து, அவர்களின் அரசியல் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இந்த தேர்தலின் பின்னர் நாட்டில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் அமைப்பை களத்திற்கு கொண்டு வருவோம்.
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மண், கருங்கல்,மணல் மீது அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும் மோசடியான வியாபார கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.
உள்ளூராட்சி சபைகள் சுய பலத்தில் வளர்ச்சியடைய வேண்டும்
மேலும் உள்ளூராட்சி சபைகள் மத்திய அரசாங்கத்தின் நிதியை நம்பி இயங்கும் சபைகள் அல்லாது சுய பலத்தில் வளர்ச்சியடையும் சபைகளாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு செயற்பட வேண்டும்.
உள்ளூராட்சி சபைகளுக்கு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தொடர்ந்தும் நிதியை வழங்க முடியாது என்பதால், அவற்றை தமக்கு கிடைக்கும் வருமானத்தில் மக்களுக்கு சேவையாற்றும் இடங்களாக மாற்ற வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.