Home இலங்கை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

by Jey

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (20.01.2023) முற்பகல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியிலான உறவுகள் பற்றியும், தற்போதைய நிலவரம் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இந்தியா வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக் கடிதத்தையும் ஜெய்சங்கர் கையளித்தார்.

அதன்பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.

இதன்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துரைக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் அவர் இடித்துரைத்தார்.

அவர் மேலும் கூறுகையில், “13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது.

இந்தியா இலங்கையின் நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி, இலங்கைக்குத் தேவை ஏற்படும் போது, எந்தத் தொலைவுக்கும் செல்ல தயாராக உள்ள ஒரு நாடு.

எனது இலங்கைப் பயணம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகும். இலங்கைக்குத் தேவைப்படும் நேரத்தில் இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்.

திருகோணமலையை ஒரு வலுசக்தி மையமாக மேம்படுத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு நம்பகமான பங்காளியாக இந்தியா தயாராக உள்ளது.

ஒத்துழைப்பை முன்னோக்கிக் கொண்டு செல்லும் புதுப்பிக்கத்தக்கச் சக்தி கட்டமைப்புக்குக் கொள்கை அடிப்படையில் இன்று இணக்கம் எட்டப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

related posts