கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, 64-ம் நிலை வீராங்கனை டோனா வெகிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார்.
1 மணி 49 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் டோனா வெகிச்சை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். அவர் ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதிக்குள் நுழைவது இது 4-வது முறையாகும்.
மற்றொரு அரைஇறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். அவர் 1 மணி 27 நிமிடம் நடந்த ஆட்டத்தில் 3-6, 5-7 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள மாக்டா லினெட்டிடம் (போலந்து) சரண் அடைந்தார்.
வெற்றியை ருசித்த 30 வயதான மாக்னா லினெட் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார். மாக்டா லினெட் ஏற்கனவே இந்த தொடரில் தரவரிசையில் ‘டாப்-20’ க்குள் இருக்கும் 3 வீராங்கனைகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இந்த வெற்றியை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இதனை எனது வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கமாட்டேன்’ என்று மாக்டா லினெட் தெரிவித்தார். அரைஇறுதியில் மாக்டா லினெட், சபலென்காவை சந்திக்கிறார்.