இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா (101 ரன்கள்), சுப்மன் கில் (112 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்தனர்.
ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா விளாசிய 30-வது சதம் இதுவாகும். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கின் (30 சதம்) சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.
போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு அடித்த முதல் சதம் இதுவாகும் என்று ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நான் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தமே 12 ஒருநாள் போட்டியில் தான் விளையாடி இருக்கிறேன்.
நீங்கள் 3 ஆண்டுகள் என்று பலமாக சொல்வது மிகவும் அதிக காலம் போல் தோன்றுகிறது. என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒளிபரப்பு நிறுவனம் புள்ளி விவரங்களை சரியான பார்வையில் கொடுக்க வேண்டும்.