திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கருக்கு மேல் ஒரே பகுதியில் உள்ள விவசாய நிலத்தினை அருணாசலேஸ்வரர் பார்வையிடும் ைவபவம் இன்று காலை நடந்தது.
இதற்காக கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி டிராக்டர் மூலம் சாலை வழியாக வந்தார்.
கலசபாக்கம் செல்லும் சாலையில் நாயுடுமங்கலம் அருகே உள்ள தனகோட்டிபுரம் கிராமத்தில் ஏரியின் அருகில் அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை அப்பகுதி விவசாயிகளும் மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.
இதனை ஆண்டுதோறும் கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறும் ஆற்று திருவிழாவின் போது அருணாசலேஸ்வரர் வந்து பார்வையிடும் வைபவம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு அண்ணாமலையார் தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள நிலத்தினை பார்வையிடுவதற்காக அதிகாலையில் சென்றிருந்தார் அப்போது கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து விவசாய நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை அண்ணாமலை யாருக்கு மாலையாக அணிவித்தனர்.
மேலும் விவசாயம் மூலம் கிடைத்த அரிசியை கொண்டு பொங்கல் வைத்து அண்ணாமலையாருக்கு படையல் இட்டு வழிபட்டனர். கிராமமே ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்த வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.