ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.
பொதுவாக இது போன்ற முக்கியமான தொடர்களுக்கு முன்பாக வெளிநாட்டு அணிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள், இங்குள்ள சூழலில் பழகி தங்களை தயார்படுத்துவதற்காக பயிற்சி போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்து கொடுப்பது உண்டு.
ஆனால் தற்போதைய டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் எந்த பயிற்சி போட்டியிலும் விளையாடவில்லை.
அது தங்களுக்கு அவசியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே கூறி விட்டது. இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- வழக்கமாக நாங்கள் இங்கிலாந்தில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவோம். ஆனால் இந்த முறை இந்தியாவில் பயிற்சி ஆட்டம் எதுவும் இல்லை.
கடந்த முறை இந்திய மண்ணில் விளையாடிய போது பயிற்சி ஆட்டத்தில் எங்களுக்கு புற்களுடன் கூடிய வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தந்தார்கள். அதனால் சுழற்பந்து வீச்சை அவ்வளவாக எதிர்கொள்ளவில்லை.
அந்த பயிற்சி ஆட்டத்தால் எந்த பலனும் இல்லை. ஏனெனில் இந்திய ஆடுகளங்கள் சுழலுக்கு உகந்தவை. அதற்கு ஏற்ப பயிற்சி ஆடுகளம் இல்லை. எனவே இந்தியாவில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதில்லை என்ற முடிவு சரியானது தான். அதற்கு பதிலாக வலை பயிற்சியில் முடிந்த அளவுக்கு சுழற்பந்து வீச்சாளர்களை அதிகமாக பந்து வீச வைத்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு ஆயத்தமாவோம்.