இலங்கை கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. பின்னர் அண்டை நாடுகளின் உதவியுடன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் கோதுமை, பால் பொருட்கள், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எரிசக்தி துறை நெருக்கடியால், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது.
இதனை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன் கேட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகமும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு கடனாக நிதியுதவி வழங்க முன்வந்தது.