இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது.
‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தேனீர் இடைவெளிக்கு பின்னர் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 24 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 56 ரன்களுடனும் (69 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட அஸ்வின் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.