Home இந்தியா சென்னையில் வீடுகளை வாடகைக்கு விட்டு ரூ.5 கோடி வரை மோசடி

சென்னையில் வீடுகளை வாடகைக்கு விட்டு ரூ.5 கோடி வரை மோசடி

by Jey

சென்னை தியாகராயநகர் மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 73). ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தனது குடும்பத்துடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். முகப்பேர் ஏரி திட்டம் பிரதான சாலையில் இவருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இதில் 5 வீடுகள் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பை நெல்லையைச் சேர்ந்த ராமலிங்கம் (63) என்பவருக்கு மாத வாடகையாக ரூ.80 ஆயிரம் மற்றும் முன்பணமாக ரூ.6 லட்சம் என பேசி 11 மாத ஒப்பந்தத்தில் கொடுத்துள்ளார்.

ஆனால் ராமலிங்கம் 11 மாதம் கழித்து அடுக்குமாடி குடியிருப்பை கனகராஜிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் அதில் 2 வீடுகளை ஒப்படைத்த ராமலிங்கம் மற்ற 3 வீடுகளை தலா ரூ.6.5 லட்சம், ரூ.13 லட்சம், ரூ.9.5 லட்சம் என ரூ.29 லட்சத்துக்கு 3 பேருக்கு ஒத்திக்கு கொடுத்துள்ளார். இதையறிந்த கனகராஜ், இதுபற்றி ராமலிங்கத்திடம் தட்டிக்கேட்டார்.

அப்போது அவர், கனகராஜை அவதூறாக பேசி அடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நொளம்பூர் போலீசில் கனகராஜ் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராமலிங்கத்தை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரவாயல் அருகே சர்வீஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த ராமலிங்கத்தை இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ராமலிங்கம், ஏற்கனவே அமைந்தகரை, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை மொத்தமாக வாடகைக்கு எடுத்து அவற்றின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் அதில் உள்ள வீடுகளை ஒத்திக்கு விட்டு ரூ.5 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அமைந்தகரை, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட 6 போலீஸ் நிலையங்களில் ராமலிங்கம் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த ராமலிங்கம் கைதானதை அறிந்த பாதிக்கப்பட்ட வாடகைதாரர்களும், வீட்டின் உரிமையாளர்களும் நொளம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் கைதான ராமலிங்கத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

related posts