கல்முனை பகுதியில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா பணப்பையை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரச வங்கி ஒன்றிற்கு திங்கட்கிழமை 35 இலட்சம் ரூபா பணத்தினை வியாபார நடவடிக்கைக்காக வைப்பிலிடுவதற்கு சென்ற வர்த்தகர் பணத்தினை தவறவிட்டுள்ளார்.
இதன்போது உரிய வங்கி மேலாளருக்கு அறிவித்து வங்கியின் அருகில் இருந்த சிசிடிவி கமராவில் தவறவிடப்பட்ட பணத்தை ஒருவர் எடுத்து செல்வதினை அவதானித்து மறுநாள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய பணத்தை தவறவிடப்பட்ட வர்த்தகர் சென்றுள்ளார்.
அதே நேரம் குறித்த பணத்தினை கண்டெடுத்த மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியை சேர்ந்த இளைஞனும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு வருகை தந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
இதன்போது பணத்தினை தொலைத்த உரிமையாளர் பொலிஸார் முன்னிலையில் தான் கொண்டு வந்த ஆதாரங்களை சமர்ப்பித்திருந்ததையடுத்து பணம் பொலிஸாரினால் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.