கர்நாடகாவில் மாநில டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், ஸ்வீடன் நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீரரான ஜோர்ன் போர்க் மற்றும் முன்னாள் இந்திய டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் ஆகியோரை கவுரவித்து விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடானது.
எனினும் காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. நிகழ்ச்சி 10.15 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், 11 மணிக்கு தனது மகன் நடைபெறும் டென்னிஸ் போட்டியை காண வேண்டி, போர்க் உடனடியாக அந்த விழாவில் இருந்து வெளியேறினார்.
தனியாக விருது பெறுவது சரியாக இருக்காது என இந்திய டென்னிஸ் பிரபலம் விஜய் அமிர்தராஜும் விழாவில் இருந்து வெளியேறி உள்ளார்.
இந்த விவரம் முதல்-மந்திரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்-மந்திரியால் சரியான நேரத்திற்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டு விட்டது என தெரிவித்தது.
எனினும், முழு விவரங்களை அறிந்து, இந்த விசயங்களை மனதில் கொள்ளாமல் காலை 11.15 மணிக்கு வந்து, போர்க்கின் மகன் விளையாடிய டென்னிஸ் போட்டியை பார்த்து விட்டு முதல்-மந்திரி பொம்மை சென்றுள்ளார்.
அடுத்த இரு நாட்களில் போர்க் மற்றும் அமிர்தராஜ் இருவரையும் முதல்-மந்திரி அலுவலகத்திற்கு அழைத்து அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என கர்நாடக மாநில டென்னிஸ் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
அந்த டென்னிஸ் போட்டியில் 6-2, 6-3 என்ற புள்ளி கணக்கில் போர்க்கின் மகன் லியோ (வயது 19) தோல்வி கண்டார். முன்னணி டென்னிஸ் வீரரான போர்க் உலக தரவரிசையில் நம்பர் 1 இடம் வகித்தவர். 6 பிரெஞ்சு ஓபன் மற்றும் தொடர்ச்சியாக 5 விம்பிள்டன் என மொத்தம் 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் ஆவார்.