திருவண்ணாமலை குற்ற செயல்களை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் ரோந்து திருவண்ணாமலை நகரில் கடந்த 12-ந்தேதி அதிகாலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையத்திலும் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதில் இருந்த சுமார் ரூ.73 லட்சத்தை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர்.
ஒரே நாள் இரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இரவில் ரோந்து செல்லும் போலீசார் ஏ.டி.எம். மையங்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனை மேலும் 24 மணி நேரமும் முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் ‘ஸ்ட்ரோமிங்’ ஆபரேஷன் நடைபெற்றது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் உள்ளே வரக்கூடிய வாகனங்கள், வெளியே செல்லக்கூடிய வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் போலீசாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.