மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதிதாக துவங்கப்படுகிற போலியான நிதி நிறுவனங்களை துவக்கத்திலேயே கண்டறிந்து அவர்களின் செயல்பாட்டை உடனடியாக முடக்குவதற்கான அனைத்து விதமான உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தனியார் நிதி நிறுவன மோசடிகள் என்பது ஒரு தொடர் கதையாகி வருகிறது. ஆங்காங்கே புற்றீசல் போல புதிது புதிதாக முளைக்கும் போலியான நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகி விடுகின்றனர்.
இந்நிறுவனங்களிடம் பணத்தை இழக்கும் மக்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்பதும், சிலர் தற்கொலை செய்து கொள்வதும் வழக்கமான ஒன்றாகவே மாறியுள்ளது.
எனவே இத்தகைய போலியான நிதி நிறுவனங்களின் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.