காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு மற்றும் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தினார். கடந்த ஜனவரி இறுதியில் இந்த பாதயாத்திரை நிறைவடைந்தது.
இந்நிலையில், ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார்.
இதன்பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என ராகுல் காந்தி பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என்றும் தெரிவித்து இருந்தது.