கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது.
ஆனால் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். இதனிடையே, என்.எல்.சி நிறுவனம் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர்.
மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணியும் நடைபெற்றது. இதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, என்.எல்.சி. நிர்வாகத்தை கடலூர் மாவட்டத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாமக நிறுவன தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் கடலூரில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தும் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.