திரைப்பட கலைஞர்களுக்கு எத்தனை விருதுகள் கிடைத்தாலும் உலகின் சிறந்த அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கார்தான் அவர்களது இலக்காக இருக்கும்.
மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படும் இந்த விருது சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டின் சினிமா கலைஞர்களுக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. ஆஸ்கார் விருது வழங்கும் விழா 2009-ம் ஆண்டில் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்காக தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றார்.
‘சவுண்ட் மிக்சிங்’ பணிக்காக ரசூல் பூக்குட்டி விருது பெற்றார். இந்த நிலையில் 95-வது ஆண்டாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் டால்பி தியேட்டரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
அமெரிக்க டெலிவிஷன் நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். உலகின் சிறந்த படங்கள், நடிகர், நடிகை உள்ளிட்டோருக்கு விருதுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன.