சென்னை அண்ணாநகரில் உள்ள கோபுர பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று ஆகும். இந்த பூங்காவில் 135 அடி உயர கோபுரம் உள்ளது. அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக இந்த கோபுர பூங்கா திகழ்ந்து வந்தது. பூங்காவில் உள்ள கோபுரத்தின் மீது ஏறிச்சென்று பொதுமக்கள் சென்னை மாநகரின் அழகை ரசித்து வந்தனர்.
இந்த நிலையில், காதல் தோல்வி அடைந்த ஒரு சில காதல் ஜோடிகள் இந்த கோபுரத்தின் மேலே ஏறிச்சென்று தற்கொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்தது. இதனால், கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்த கோபுரத்தின் மேலே ஏறிச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கோபுரம் மற்றும் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபுரம் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சீரமைக்கப்பட்டு வந்தது. கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகளில் தடுப்பு கம்பிகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவு பெற்றுள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த கோபுரத்தை திறந்துவைத்தார்.