திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் உள்ள சந்தை மேட்டுப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் டி.ராஜு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் பங்கேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட கவுன்சிலர் தெய்வமணி, ஒன்றிய கவுன்சிலர் ஏ.ஞானவேல், ஒருங்கிணைந்த வெம்பாக்கம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஜே.கி.கே.சீனிவாசன், என்.சங்கர், மதியழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சன்னரக நெல் ஒரு கிலோ ரூ.21.60-க்கும், குண்டு ரகம் நெல் ஒரு கிலோ ரூ.21.15-க்கும், 17 சதவீத ஈரப்பதத்துடன் கொள் முதல் செய்யப்படுகிறது.
மேலும் நாள்தோறும் சராசரியாக 40 கிலோ எடை வீதம் 600 முதல் 700 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.