Home இலங்கை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம்

by Jey

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் பொஹொட்டுவ முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மே தினக் கொண்டாட்டத்தின் பிரசார நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரு.சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை அடிப்படையாக கொண்டு அலுவலகங்கள் திறப்பு, மே அணிவகுப்பு ஏற்பாடுகள், தொகுதி மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத் தொடர் குறித்து நீண்ட விவாதம் நடந்துள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்கு ஜனாதிபதி எவ்வாறு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மே தினத்தை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து மாவட்ட மற்றும் தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனவும், தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த மற்றும் காமினி லொக்குகே தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

related posts