புதுச்சேரி சட்டசபையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவரப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா தாக்கல் செய்து பேசியதாவது:- சுற்றுலா மற்றும் ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற புதுவை மாநிலத்தில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர்.
இந்த விளையாட்டில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மூழ்குவதும், அதன் காரணமாக பணத்தை இழந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டுக்களை வீடுகளில் இருந்து தான் விளையாடுகிறார்கள்.
அதை ‘கூகுள் பிளே ஸ்டோர்’ மற்றும் ‘ஆப்பிள் ஆப் ஸ்டோர்’ ஆகியவை தான் கண்டறிய முடியும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
தமிழக முதலமைச்சர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றி, அந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.