சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாது என பேராதனை பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார்.
இந்த நிபந்தனைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 2026ம் ஆண்டியில் டொலர் கையிருப்பினை 10.9 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த 2022ம் ஆண்டில் நாட்டின் டொலர் கையிருப்பு வெறும் 1.9 பில்லியன் டொலர்கள் எனவும் மூன்றாண்டு இடைவெளியில் பாரிய தொகையில் டொலர் கையிருப்பினை அதிகரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
கடன் செலுத்துகைகளை குறைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டாலும் குறுகிய காலத்தில் கடன் செலுத்துகைகளை குறைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஓரளவு பூர்த்தி செய்ய வேண்டுமாயின் ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து, அரச நிறுவனங்களை செயற்திறன் மிக்கதாக்க மாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய அரசியல் பொருளாதார சூழ்நிலையில் இவ்வாறான சாதக மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை எனவும் இதனால் சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் பேராசிரயர் வசந்த அதுகோரள தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.