ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காகப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நியூயோர்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதிகள், முன்னாள் ஜனாதிபதிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் இரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்திற்கு வந்த ட்ரம்ப், வழக்கமான நீலநிற கோட்டும், சிவப்பு நிற டையும் அணிந்திருந்துள்ளார்.
நீதிமன்றத்திற்குள் நுழையும் போதே சற்று மந்தமாகக் காணப்பட்ட ட்ரம்ப், தனக்காகக் காத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை நோக்கி மெதுவாக நடந்து சென்றுள்ளார்.
அங்கே, ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்திக்கவே இல்லை. அவரது உடல் மொழி மற்றும் முக பாவனைகள் பெரிய அளவில் எதையும் வெளிப்படுத்துவதாக இல்லை.
ட்ரம்ப் முன்னிலையாவதைச் செய்தியாக்குவதற்காக அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் தொலைபெசிகள் மற்றும் மடிக்கணினிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.
அத்துடன், நீதிபதி ஜூவான் மெர்ச்சான் வந்ததும் ட்ரம்ப் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளனர்.