உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர். கல்விக்காகவும், பணிக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்று வாழும் அவர்கள், அங்கு பல்வேறு துறைகளில் சாதனையும் படைத்து வருகின்றனர்.
கமலா ஹாரிஸ், ரிஷி சுனக் போன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் ஆட்சி அதிகாரத்தையும் கையில் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், பேரன் எனும் அமெரிக்க செய்தித்தாள் நிறுவனம், அமெரிக்க நிதித்துறையில் முக்கிய பதவிகளை அடைவதற்கும், அதன் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் முக்கிய பங்காற்றிய 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பெண்கள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் அனு ஐயங்கார், ஏரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ரூபல் ஜே.பன்சாலி, ஃப்ராங்க்ளின் டெம்ப்பிள்டன் நிறுவனத்தின் சோனல் தேசாய், கோல்டுமேன் சாக் நிறுவனத்தின் மீனா ஃபிளின் மற்றும் அமெரிக்க வங்கியைச் சேர்ந்த சவிதா சுப்பிரமணியம் ஆகிய ஐந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்கள், அமெரிக்க நிதித்துறையில் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.