திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா கிராமம் வழியாக ஆந்திராவை நோக்கி சரக்கு வேன் ஒன்று தினமும் சந்தேகத்திற்கு இடமாக சென்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக சிவாடா கிராம மக்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சிவாடா கிராம வழியாக ஆந்திரா எல்லையை நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்தது.
அந்த வேனை அந்த பகுதி மக்கள் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். பொதுமக்களை கண்டதும் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் சரக்கு வேனை சோதனை செய்தபோது, மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.