Home இலங்கை அனைவரும் ஒன்றிணைந்து புலம்பெயர் அமைப்புகளிடம் கோரிக்கை

அனைவரும் ஒன்றிணைந்து புலம்பெயர் அமைப்புகளிடம் கோரிக்கை

by Jey

இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு பெரும்பாலான இடங்களில் நெல் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றார்கள்.

இலங்கை இராணுவத்தினரின் விவசாய திட்டத்தில் பெரும் போக அறுவடையின் பின்னர் தமக்கான தேவை போக மிகுதி நெல்லினை ஏழை மக்களுக்கு வழங்க தயாராக இருப்பதாக இராணுவ தளபதி ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.

இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவுமாறு அனைவரும் ஒன்றிணைந்து புலம்பெயர் அமைப்புகளிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும், ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்கவின் நெறிப்படுத்தலின் கீழ் வறிய குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் அரிசி வீதம் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல விவசாயிகளுக்கும் இந்த பெரும் போகத்தின் பின் நெல்லினை விற்பனை செய்வதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

அவர்களுடைய விருப்பத்தின் படி இன்றைய தினம் அது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட யுத்த அழிவுகளுக்கு பின் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

அதாவது கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய ஏற்பட்டது.

அதேபோல பொது மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும் நாங்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது.

அதேபோல பொருட்களைக் கொள்வனவு செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைமையும் காணப்பட்டது.

அது வடக்கு, கிழக்கு, தெற்கு மக்கள் என்றல்லாது இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்குமான பிரச்சினையாக காணப்பட்டது.

அந்த நேரத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டினை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி பதவியினை பொறுப்பேற்றிருந்தார். அந்த நேரத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டிருந்தன.

மக்கள் வாழ்வதற்கு முடியாத ஒரு நிலை காணப்பட்டது. ஆனால் ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்கப்பட்ட நிலையில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதோடு மக்களுக்கான பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எமது நாட்டைப் போல வேறு பல நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து நிதியினை பெற முடியாத நிலையில் உள்ளார்கள்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்ட நிலையில் தற்போது நாடு படிப்படியாக முன்னோக்கிச் செல்கின்றது.

 

 

related posts