பிரிட்டனில் தேம்ஸ் நதியின் ஒரு பகுதியில் நீச்சலடித்து விளையாடிய நண்பர்கள் குழு ஒன்று, இறுதியில் பொலிசாரின் உதவியை நாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேம்ஸ் நதியின் ஒரு பகுதியில் நண்பர்கள் சிலர் நீச்சலடித்து விளையாடியுள்ளனர். இந்த நிலையில் இரவு 10 மணியளவில் பொலிசாரின் உதவியை நாடிய அந்த குழு, தங்களுடன் நீச்சலடித்து விளையாடிய நண்பரை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த Gloucestershire தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை பிரிவினர் காணாமல் போன நபரை தேடியுள்ளனர். நதியில் நீச்சலிட்டு விளையாடிய அந்த நண்பர்கள் குழுவினரின் வயது 17 இருக்கலாம் எனவும், விடிகாலை 4 மணி வரை அப்பகுதி முழுவதும் தேடியும் மாயமான இளைஞரை கண்டெடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஞாயிறன்று இரவு நடந்த இச்சம்பவத்தில் இதுவரை அந்த இளைஞரை மீட்க முடியாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதும், தேசிய பொலிஸ் வான் படை, குளோசெஸ்டர்ஷைர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை மற்றும் செவர்ன் பகுதி மீட்பு சங்கம் ஆகியவை தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து வருவதாக கூறுகின்றனர். மேலும், மாயமான இளைஞர் தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.