Home இலங்கை வாடகை முச்சக்கர வண்டியினை செலுத்துபவர்களுக்கு…..

வாடகை முச்சக்கர வண்டியினை செலுத்துபவர்களுக்கு…..

by Jey

யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

இன்று(03.04.2023) யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.

இதன் காரணமாக முச்சக்கர வாடகை வண்டி செலுத்துவோர் தொடர்பில் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பிலும் தீர்மானம் எடுப்பதற்காக நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட முச்சக்கர வாடகை வண்டி சங்கத்தினர், மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வர்த்தக சங்க பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிநிதி மற்றும் அதனுடன் இணைந்ததாக வடமாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை போன்ற முக்கியமானதுறை சார்ந்த உத்தியோகத்தர்களை அழைத்து யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சம்பந்தமான பல விடயங்கள் ஆராயப்பட்டது.

அதிலே பொருத்தமற்ற அளவுக்கதிகமான ஒலிகளை எழுப்பி செல்லுவது அநாவசியமான கண்ணாடிகள் பொருத்தி இருப்பது மற்றும் தேசிய கொடியினை அவமதிக்கும் வகையிலே கிழிந்த மாசு படிந்த வாகனங்களுக்கு பொருத்தமற்ற அளவிலான தேசியக் கொடிகளை பொருத்துதல் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டது.

குறிப்பாக பயணிகள் அச்சப்படும் அளவிற்கு பயணிகள் மட்டுமல்லாது வீதிகளில் பயணிப்போர் அச்சப்படும் அளவிற்கு உயர்ந்த ஒலிகளை எழுப்புகின்ற கருவிகளை முச்சக்கர வண்டிகளிலே பொருத்துவது தடுக்கப்பட வேண்டும்.

அதுபோல வாடகை முச்சக்கர வண்டியினை செலுத்துபவர்கள் மரியாதைக்குரிய ஆடைகளை அணிந்து நல்ல பழக்க வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும் போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது .

அத்தோடு பதிவு செய்யப்படாத வாடகை முச்சக்கர வண்டிகளும் யாழ்ப்பாண நகர பகுதிகளில் தொல்லையாக இருப்பதாக மாநகர சபையினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

related posts