75 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டித்தமை தொடர்பான வழக்கு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கும், ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கு செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
குறித்த இரு வழக்குகளும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் விசேடமாக சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தொடர்பாகவும், யாழில் கொண்டாடப்பட்ட 75 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டித்தமை தொடர்பான இரு வழக்குகளும் இன்றைய தினம்(08.05.2023) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கறுப்பு தினமாக அனுஷ்டித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், யாழ்.மாநகர முன்னாள் மேயர் மணிவண்ணன் மற்றும் வேலன்சுவாமிகள் ஆகியவர்களிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த தவணையில் பிணை வழங்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் வழக்கு அழைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நான் 1,2,,4,7 ஆவது சந்தேகநபராக முன்னிலயாகி சில விடயங்களை எனது வாதத்தில் முன்வைத்தேன்.
அதில், கைது செய்யப்பட்டமைக்கு முதலறிக்கையில் கூறப்பட்டுள்ள காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்கள் என்றும் இதனால் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் முன்வைத்திருந்தேன்.