பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் நேற்று முந்தினம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இம்ரான்கானின் ஆதரவாளர்கள் பாரிய கலவரத்தை ஏற்படுத்தி வருகின்றனர்
ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் இல்லத்தின் மீது, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
போலீசாரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் பிரதமரின் மாடல் டவுன் லாகூர் இல்லத்தை அடைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
பின்னர் அவர்கள் வீட்டின் முன் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.