இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தலை தடுக்கும் வகையில் சுற்றாடல் அமைப்புகளினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் அமைச்சரவை குழு உறுப்பினர்கள் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 19ஆம் திகதி இவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(11) உத்தரவிட்டது.
இலங்கை வனஜீவராசிகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம், மாத்தறை ஆனந்த சாகர தேரர், ஒட்டாரா குணவர்தன, ருக்ஷான் ஜயவர்தன உள்ளிட்ட 27 பங்குதாரர்கள் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, பிரதிவாதிகள் ஒரு இலட்சம் குரங்குளை இந்த நாட்டிலிருந்து சீன நிறுவனமொன்றுக்கு பரிசோதணைக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
எனவே எந்த நேரத்திலும் இலங்கை குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதியாகும் அபாயம் உள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். இந்த முடிவு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.