வட மாகாண பாடசாலைகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில்
முறைகேடுகள் இடம்பெறுவதாக வடமாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ.உமா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண பாடசாலைகளில் மதிய நேர சத்துணவு திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழும் நிலையில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் மதிய நேர சத்துணவு திட்டத்தில் சில பாடசாலைகளில் முறைகேடுகள் இடம் பெறுவது தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தீவக வலையப் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு திட்டத்தில் முறைகேடு இடம்பெற்றமை தொடர்பில் ஆதாரங்களுடன் எமக்கு முறைப்பாடு கிடைத்தது.
குறித்த பாடசாலையின் அதிபர் மாணவர்களுக்காக வழங்கப்படும் சத்துணவு நிதியை முறைகேடாக கையாண்டமை தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
அது மட்டுமல்லாது மேலும் சில பாடசாலைகள் தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ள நிலையில் முறைப்பாடுகளை வழங்கியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஆதாரங்களை பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் பாடசாலைகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தை கண்காணிப்பதற்கும் சோதனை இடுவதற்கும் விசேட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுத் திட்டம் தொடர்பில் பாடசாலைகளுக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு அறிக்கை இடுவார்கள்.
ஆகவே அரசாங்கத்தினால் பாரிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தின் நோக்கம் உரிய முறையில் நிறைவேற்றப்பட வேண்டுமே அல்லாமல் முறைகேடுகளுக்கு அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.