காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் வெற்றி அடைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது.
பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை ஆதரித்து கருத்து கூறி இருப்பதாகவும், அதனால் சித்தராமையா புதிய முதல்-மந்திரியாக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஒக்கலிகர் சங்கம், டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
அந்த சமூக மடாதிபதிகள் நிர்மலானந்தநாத சுவாமி, நஞ்சாவதூத சுவாமி மற்றும் லிங்காயத் மடாதிபதிகள் என 20 மடாதிபதிகள் பகிரங்கமாகவே டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.