Home உலகம் பிரித்தானியாவில் தீவைப்பு கும்பலால் பதற்றம்

பிரித்தானியாவில் தீவைப்பு கும்பலால் பதற்றம்

by Jey

பிரித்தானிய நாட்டில் மோட்டார் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்த தீ வைப்பு குழுவொன்று, சாலையில் நின்று கொண்டிருந்த 12 கார்களுக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா – டோர்செட்-டின், விம்போர்ன் பகுதியில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்த தீ வைப்பு கும்பல் ஒன்று, அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த கார்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.

பெரும்பாலான குடியிருப்புவாசிகள் உறங்கிக்கொண்டு இருக்கும் போது தீவைப்பு கும்பல் இந்த செயலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தீவைப்பு சம்பவத்திற்கு பிறகு, கடந்த திங்கட்கிழமை (15-05-2023) அதிகாலை சாலையை பார்வையிட்ட அப்பகுதி குடியிருப்புவாசிகள் நகரை போர் பாதித்த நகருடன் ஒப்பிட்டனர்.

தீ வைக்கப்பட்ட கார்களில் இருந்து பயங்கர வெடி சத்தங்கள், அடர்த்தியான புகை வெளியேறியதை தொடர்ந்து, நள்ளிரவு 1:20 மணியளவில் கண்விழித்த குடியிருப்புவாசி ஒருவர், சாலையில் நின்று கொண்டிருந்த கார்கள் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இச் சம்பவத்தை தொடர்ந்து டோர்செட் மற்றும் வில்ட்ஷயர் பகுதியை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்களுக்கு இரவு 11:30 மணி முதல் 2:30 மணி வரை 65 அவசர அழைப்புகள் அழைக்கப்பட்டுள்ளது.

பூல் சாலையில் நின்ற காரில் வைக்கப்பட்ட தீ அருகில் உள்ள வீட்டிற்கும் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், கார்களில் வைக்கப்பட்ட தீயை போராடி அணைத்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் வழங்கியுள்ள தகவலில், 12 கார்கள் மற்றும் வீடு ஒன்று தீயில் கருகி சேதமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை தொடங்கி இருப்பதாகவும், சிசிரிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் பொதுமக்களுக்கு யாருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

related posts