16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அதிகாரிகளுடன் சபாநாயகர் ராகுல் நர்வேகர் ஆலோசனை நடத்தினார். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனாவாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதாக அவர் கூறினார்.
மராட்டிய அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்கில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அப்போது கவர்னர் மற்றும் சபாநாயகர் எடுத்த முடிவுகளின் தவறுகளை சுட்டிக்காட்டியது.
இந்த நிலையில் லண்டனில் இருந்து திரும்பிய ராகுல் நர்வேகர் நேற்று சட்டமன்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனாவாக தேர்தல் கமிஷன் அங்கீகரித்து உள்ளது. அவரது அணிக்கு கட்சி பெயர், சின்னத்தை வழங்கி உள்ளது.
இது முன்னோக்கி செல்வதற்கான முடிவே தவிர, பின்னோக்கி செல்வற்கான முடிவு அல்ல.
கடந்த ஆண்டு (2022) ஜூலை முதல் சட்டசபையில் சிவசேனா கட்சியை எந்த அணியினர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களோ, அதில் இருந்து தொடங்கி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் முடிவு எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.