இலங்கையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புக்கள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கின்றோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்ட சம்பவங்களில் பல பத்தாயிரம் தமிழர்கள் உயிரிழந்து, மேலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள், காயமடைந்தார்கள் அல்லது இடம்பெயர்க்கப்பட்டார்கள்.
அர்த்தமற்ற இந்த வன்முறையால் ஏற்பட்ட வேதனையுடன் வாழும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப் பிழைத்தோர் மற்றும் அவர்களது அன்புக்குரியோர் ஆகியோரை நாம் இன்று நினைவில் கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.