இந்தியாவில் 2000 ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையில் 2000 ரூபாய் நாணயத்தாள்கள் மீளப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம் 2000 ரூபா நாணயத்தாள்களை வழங்க வேண்டாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் உள்நாட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாள் ஒன்றுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான 2,000 ரூபா நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் “பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்” ஒரு பகுதியாக 2,000 மற்றும் 500 ரூபா புதிய நாணயத்தாள்கள் அறிமுக்கப்படுத்தப்பட்டன.
எனினும், 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, நாட்டின் மொத்த நாணயத்தாள்களின் மதிப்பில் 50 வீதம் 2000 ரூபாய் நாணயத்தாள்களின் செல்வாக்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு முதல் 2000 ரூபா நாணயத்தாள்கள் அச்சடிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, 2000 ரூபாய் நாணயத்தாள்களை மீளப் பெறவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.