Home இலங்கை மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசும் கவனம் கொள்ளுதல் வேண்டும்

மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசும் கவனம் கொள்ளுதல் வேண்டும்

by Jey

இலங்கையில் மலையக மக்களின் 200 ஆண்டுக் கால வரலாற்றில் 150 ஆண்டு காலம், அந்த மக்கள் பிரித்தானியரின் ஆட்சியின் கீழேயே வைக்கப்பட்டிருந்தனர். எனவே மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசும் கவனம் கொள்ளுதல் வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷேரா ஹவுல்டனிடம், நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.

நேற்றைய தினம் (29.05.2023) மாலை நுவரெலியாவில், பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தபோது மலையக மக்களின் கரிசனைகள் குறித்து அவர், கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இதன்போது பகிர்ந்துக்கொண்ட விடயமாவது,1823களில் தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வந்த காலத்தில் இருந்து 1972ஆம் ஆண்டு இலங்கைக் குடியரசாகும் வரை மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தினரின் தொழில் மற்றும் சமூக நிர்வாகத்தினை பிரித்தானியரே மேற்கொண்டனர்.

எனவே இன்று 200 வருட மலையக வரலாற்றில் பெரும்பங்கு பிரித்தானியாவுக்கு உரியது.

இந்த நிலையில், பல்வேறு உரிமை மறுக்கப்பட்டவர்களாக இலங்கையில் வாழும் இந்த மக்கள் குறித்த கரிசனையை பிரித்தானியா வெளிப்படுத்த வேண்டும்.

இந்த மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஓர் குறைகேள் அதிகாரியை அல்லது குழுவை நியமிக்க வேண்டும்.

அதன் ஊடாகத் தொகுக்கப்படும் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுமிடத்து, பல்வேறு உரிமை மறுக்கப்பட்ட இந்த மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேசத்தின் முன்னிலைக்கு கொண்டு செல்லவும் தீர்வு பெறவும் வழியேற்படும்.

அத்துடன் பிரித்தானியரால் வழங்கப்பட்ட இலங்கைக் குடியுரிமையைப் பறித்த இலங்கை சுதேச அரசு, அதனை மீளவும் வழங்கும் போது வாக்களர் அந்தஸ்த்தினை மாத்திரம் வழங்கி உள்ளதே தவிர அவர்களை முழுமையான இலங்கைக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே இந்த மக்களை அர்த்தமுள்ள குடிமக்களாக ஏற்றுக் கொள்ளச் செய்யும் பொறுப்பையும், பிரித்தானிய அரசு ஏற்று, இலங்கை அரசுக்கு அது தொடர்பில் வலியுறுத்த வேண்டும் எனவும் திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

related posts