Home இலங்கை மீண்டும் நாட்டை குழப்ப இடமளிக்க போவதில்லை – ஜனாதிபதி

மீண்டும் நாட்டை குழப்ப இடமளிக்க போவதில்லை – ஜனாதிபதி

by Jey

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது மீண்டும் நாட்டை குழப்ப இடமளிக்க போவதில்லை என கூறியதாகவும் ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வர இடமளிக்க மாட்டேன் என்ற அர்த்ததில் இதனை தெரிவித்தாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாவலையில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.ஜனாதிபதி கூறும் நாட்டை குழப்பியவர்கள் யார் என்பது சிக்கலுக்குரியது. ஜனாதிபதியின் கருத்து நகைப்புக்குரிய விடயம்.

கடந்த 75 ஆண்டுகளில் 40 ஆண்டுகள் அவர் கொள்கை வகுப்பாளராக செயற்பட்டு 30 ஆண்டுகள் நிறைவேற்று அதிகாரத்தை பிரதிநித்துவப்படுத்தியவர்.

இதனை ஆராயும் போது நாட்டை சிக்கலுக்குள் தள்ள நடவடிக்கை எடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது.ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் நாட்டில் ஜனநாயகத்திற்கு இடமில்லையோ என்ற கேள்வி எழுகிறது.

அவர் எப்போதும் 2048 ஆம் ஆண்டளவில் நாடு அபிவிருத்தியடைந்து விடும் எனக்கூறுவது நகைப்புக்குரியது.அவர் 2000 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்வைத்து இந்த கதையையே கூறினார்.

2015 ஆம் ஆண்டு 100 நாள் வேலைத்திட்டத்துடன் 2025 ஆம் ஆண்டில் புதிய நாட்டை உருவாக்குவோம் என தெரிவித்தார்.

இவை எதுவும் வெற்றிகரமான வேலைத்திட்டங்களாக இருக்கவில்லை என்பதுடன் வெறும் கனவு கதைகளாகவே இருந்தன.அபிவிருத்தியடைந்த நாட்டை அளவிடும் இரண்டு அளவீடுகள் இருக்கின்றன.

அவை தனிநபர் வருமானம் மற்றும் மொத்த தேசிய உற்பத்தி என்பவாகும். இவை இரண்டும் குறித்து கவனத்தை செலுத்த வேண்டும்.அபிவிருத்தியடைந்த நாடு ஒன்றில் தனிநபர் வருமானம் 12 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்.

அத்துடன் மொத்த தேசிய உற்பத்தி 300 பில்லியன் டொலர்கள். இலங்கையின் தற்போதை தனிநபர் வருமானம் 3 ஆயிரத்து 474 டொலர்கள்.அப்படியானால், அடுத்த சில வருடங்களில் தனிநபர் வருமானத்தை நான்கு மடங்காக அதிகரிக்க வேண்டும். அது வெறும் கனவு மட்டுமே எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

related posts