ஒடிசாவில் 3 ரெயில்கள் விபத்தில் சிக்கியது பற்றிய நிலைமையை நேரில் அறிய பிரதமர் மோடி ஒடிசாவுக்கு இன்று புறப்பட்டு சென்று உள்ளார். இதனை பிரதமர் அலுவலகமும் டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளது.
அதற்கு முன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உயர்மட்ட கூட்டம் ஒன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஒடிசாவில் ரெயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி நேற்று ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.
இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் 650 பேர் கோபால்பூர், கந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ நகர மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என தென்கிழக்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது. இதேபோன்று, மீட்பு பணியை மேற்கொள்ள இந்திய விமான படையின் மி-17 ரக ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. முதலில் வெளியான, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் அறிக்கையின்படி, 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது
. இந்நிலையில், ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. தொடர்ந்து, அந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.