Home உலகம் அமெரிக்காவில் கைதி ஒருவருக்கு 371 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புதல்

அமெரிக்காவில் கைதி ஒருவருக்கு 371 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புதல்

by Jey

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் பொலிஸ் வாகனத்தில் கைதி ஒருவர் சுருண்டு விழுந்து காயமடைந்த சம்பவத்தில் மாகாண நிர்வாகம் 371 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

சம்பவம் நடந்த போது Randy Cox என்ற 36 வயது நபர் இருக்கைப் பட்டை அணிந்திருக்கவில்லை எனவும், பொலிஸ் வாகனத்தில் அவர் சிறைக்கு கொண்டுசெல்லப்படும் போது இச்சம்பவம் நடந்துள்ளது எனவும் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது நகர தலைவரும் சட்டத்தரணிகளும் கலந்தாலோசித்து இழப்பீடு வழங்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை, ஒரு பகல் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட பலகட்ட ஆலோசனைகளுக்கு முடிவில், மதியத்திற்கு மேல் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளதை அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகளை ஏற்கனவே நகர நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியிருந்தது. மட்டுமின்றி, இது நகர நிர்வாகத்தின் தவறு எனவும் Randy Cox தரப்பு சட்டத்தரணிகள் அறிக்கையூடாக வெளிப்படுத்தியிருந்தனர்.

2022 ஜூன் 19ம் திகதி தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. பொலிஸ் வாகனத்தில் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்ட Randy Cox, திடீரென்று வாகனம் நிறுத்தப்பட்டதில் தலையில் காயம் பட்டு அப்படியே சுருண்டு விழுந்தார்.

அவருக்கு அப்போது கைவிலங்கு போடப்பட்டிருந்ததால், சுதாரித்து தப்ப முடியாமல் போனது. மட்டுமின்றி இருக்கை பட்டையும் அப்போது அவர் அணிந்திருக்கவில்லை என்றே தெரியவந்தது.

பெண் ஒருவரை துப்பாக்கியால் மிரட்டிய குற்றத்திற்காகவே Randy Cox கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்புடைய வழக்கு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அந்த விபத்திற்கு பின்னர் Randy Cox பல கட்ட அறுவை சிகிச்சைக்கு உள்ளானார்.

மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது Randy Cox என்ற 36 வயது நபருக்கு கனெக்டிகட் மாகாண நிர்வாகம் 45 மில்லியன் டொலர் (ரூ.371 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

related posts