இலங்கையில் தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் முன்மொழியப்பட்டுள்ளது.
அண்மையில் கல்வி பற்றிய துறை சார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது.
இதன்போது, நாடளாவிய ரீதியில் தனியார் வகுப்புக்களை நடாத்தும் தனியார் ஆசிரியர்களின் தரம் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் தனியார் ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் தரம் குறித்து சமூகத்தில் இடம்பெறும் கலந்துரையாடல் தொடர்பிலும் பேசப்பட்டது.
அதன்படி, தனியார் ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி அவர்களின் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதே சிறந்தது என கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு பரிந்துரைத்தது.
ஏனைய நாடுகளில் தனியார் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு அந்தத் தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், இலங்கையிலும் அவ்வாறானதொரு முறையைப் பின்பற்றுவது பொருத்தமானது என கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தனியார் வகுப்பு ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு சட்டரீதியாக தொழில் அங்கீகாரம் வழங்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும், சர்வதேச பாடசாலைகளைக் கண்காணிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் கல்வி அமைச்சில் ஒரு விசேட பிரிவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.