செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதல்-அமைச்சருக்கு ஏன் வந்தது என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற ஆணையின்படி மத்திய அமலாக்கத் துறை சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட விரோத செயல்களிலேயே இந்த திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசியல் சட்டத்திற்கு புறம்பாக ஆட்சி நடத்திவரும் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தற்போது கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியைப் பற்றி ஏற்கெனவே விமர்சனம் செய்ததை, தன்னெழுச்சியாக உள்நோக்கமின்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வரும் இளைஞர்கள், சமூக பார்வையாளர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் மீது திமுக அரசு, தனது ஏவல் துறை மூலம் பொய் வழக்குகள் புணைந்து, கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.