அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்; மாநில உரிமைகளை மீட்க போராடுவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நாம் நினைக்காத நாளில்லை; எண்ணாத பொழுதில்லை.
நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடிமனதிலிருந்து உச்சரிக்கும்போதும் உடன்பிறப்புகளான உங்களுக்கும் உங்களில் ஒருவனான எனக்கும் உற்சாகம் பிறக்கிறது; உத்வேகம் கிடைக்கிறது!
தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெயர், கலைஞர்! எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான்! ஜனநாயக அறப்போர்க்களத்தில் வாளாகவும் கேடயமாகவும் இருந்து நம்மையும் நம் உயிர்மூச்சான கழகத்தையும் காத்து வருபவர் கலைஞர்! அவரை நாம் நினைக்க நினைக்க, எத்தகைய பகையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் எதிர்நிற்க முடியாமல் தெறித்து ஓடும்.
அத்தகைய மகத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.